குருசடை உள்பட 4 தீவுகளுக்கு சுற்றுலாப் படகுத் திட்டம்: தொடர்ந்து மீனவர்கள் எதிர்ப்பு

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து குருசடை உள்பட 4 தீவுகளுக்கு வனத்துறை சார்பில்
Updated on
2 min read

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து குருசடை உள்பட 4 தீவுகளுக்கு வனத்துறை சார்பில் செயல்படுத்த இருந்த சுற்றுலாப் படகு திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா  பகுதி 1986 ஆம் ஆண்டு தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சர்வதேச நிதி உதவியுடன் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை வனத் துறையினர் செய்து வருகின்றனர்.  பாம்பன் தோப்புக்காடு, சின்னப்பாலம், மண்டபம், சீனியப்பா தர்ஹா, வேதாளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பலதலைமுறைகளாக பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு, சிங்கிளி தீவு, புள்ளவாசல் தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய நான்கு தீவு பகுதியை சுற்றி மீன்பிடித் தொழில் மற்றும் பெண்கள் கடல் பாசி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் வனத் துறை சார்பில் பாம்பன் குந்துகால் பகுதியை மையமாக கொண்டு இந்த நான்கு தீவுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்ல சுற்றுலாப் படகு போக்குவரத்தை தொடங்கிட திட்டமிட்டு அதற்காக பல லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா சொகுசு படகுகள் தயாரிக்கப்பட்டன. மேலும் இந்தப் படகு போக்குவரத்தை கடந்த ஏப்ரல்  மாதம் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட நான்கு தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், கடல் பாசி எடுக்கவும் மீனவர்கள் யாரும் வரக்கூடாது என வனத் துறை அறிவித்ததுடன் தீவுப்பகுதியை சுற்றி  ஒளிரும் மிதவை போடப்பட்டது.  இதனால் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வனத்துறையினர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் வனத் துறையினர் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் கடலுக்குள் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மீனவ அமைப்பினர் வனத் துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர். 
இதனால் இந்த திட்டத்தை வனத் துறையினர் இன்று வரை செயல்படுத்தவில்லை. பாம்பன் குந்துகால் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் படகில் ஏறுவதற்காக போடப்பட்ட மரப்பாலம் முள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப் படகுகளையும் இந்த பகுதிக்கு கொண்டுவரவில்லை. தற்போது திட்டத்தை எப்படியாவது தொடங்கிட வேண்டும் என வனத் துறையினர் பல்வேறு மீனவ கிராமங்களில் சமாதான கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ரூ. 50 லட்சத்தில் வாங்கப்பட்ட சுற்றுலாப் படகுகள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. 
இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடிதொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறியது: ஏழை, எளிய மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலாவை மேம்படுத்த நினைத்தால் மீனவர்கள் வாழ வழியின்றி போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீவு பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்கவும், பெண்கள் கடல் பாசி எடுக்கவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com