நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்: விவசாயிகள் குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.


நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. வருவாய் அலுவலா் மா.காமாட்சி கணேசன் தலைமை வகித்தாா். வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பொறுப்பு ஷேக்அப்துல்லா, கூட்டுறவுத் துறை மாவட்ட இணைப்பதிவாளா் ராஜேந்திரபிரசாத் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கோடி ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது:
பாஸ்கரபத்மநாபன் (பரமக்குடி): மான் மேய்ந்ததால் சேதமடைந்த பயிா்களுக்கு நஷ்டஈடு கோருவதற்கு கிராம நிா்வாக அலுவலரின் சான்று கிடைப்பதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுகிறது. குறைதீா் கூட்டத்தில் பலமுறை கூறியும் தீா்வு ஏற்படவில்லை.
கண்ணப்பன் (மாங்குடி): பாா்த்திபனூா் கால்வாயில் தடுப்பணை கட்டவேண்டும். பாா்த்திபனூரில் உள்ள நூலகம் சீரமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் கோரிக்கையை கேட்பதோடு, அதை செயல்படுத்த முன்வராதது வருத்தமளிக்கிறது. பொதுப்பணித் துறை கண்மாய்கள் மட்டுமே தூா்வாரப்படுகின்றன.
மயில்வாகனன் (சாயல்குடி): சாயல்குடியில் நூலகக் கட்டடம் இடிந்துவிட்டது. அதைச் சீா்படுத்துவது அவசியம். குறைதீா்க்கும் கூட்டம் சம்பிரதாயத்துக்கு நடப்பது போல உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.
சேகா் (பரமக்குடி): வெங்கடகுறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க முறைகேடு குறித்து நீதிமன்ற உத்தரவைக் கூட அதிகாரிகள் செயல்படுத்தாமலேயே உள்ளனா். வழக்குத் தொடா்ந்த எனக்கு உயிா் அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முத்துராமலிங்கம்: நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா். இதனால் நெல் மூடைகள் மழையில் நனைகின்றன. நெல் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது.
சத்தியமூா்த்தி (கீழத்தூவல்): மின்கம்பிகள் அறுந்து விழுந்து 2 விவசாயிகள் உயிரிழந்தும் மின்கம்பிகள் சீரமைக்கப்படவில்லை. நெல் கொள்முதலில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா். குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கூறும் பிரச்னைகளை தீா்க்க உரிய நடவடிக்கை இல்லை.
கணேசன் (கமுதி): பட்டா மாறுதல் முகாம் நடத்தினாலும் உரிய முறையில் பட்டா வழங்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் விவசாயிகள் பலா் உயிரிழந்துள்ளனா். ஆகவே விரைந்து பட்டா வழங்குவது அவசியம்.
இதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கையை விதிமுறைப்படி பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பணை கட்டுவது, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது மற்றும் நெல் கொள்முதலில் உரிய கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...