47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பழைமையான சுவாமி சிலை பதுக்கல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் ரூ.200 கோடி மதிப்புள்ள பழைமையான சுவாமி சிலை ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை மீட்க சிலைக் கடத்தல்

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:08 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் ரூ.200 கோடி மதிப்புள்ள பழைமையான சுவாமி சிலை ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை மீட்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சுவாமி சிலை கடத்த முயன்றதாக கடந்தாண்டு டிசம்பரில் பாக்கியராஜ், மணிகண்டன் ஆகியோரை மதுரை மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அம்மன் சிலை மீட்கப்பட்டது. இதுதொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மலைச்சாமி உத்தரவின் பேரில் சாா்பு-ஆய்வாளா்கள் எஸ்.முருகபூபதி, விஜயகுமாா், கணேசன் ஆகியோா் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து சேலத்திலிருந்து சுமாா் ரூ.5 கோடி மதிப்புள்ள 7 சுவாமி சிலைகள் கடத்தி வரப்பட்டு ராமநாதபுரம் கூரிச்சாத்தனாா் கோயில் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தச் சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக பாஜக சிறுபான்மைப் பிரிவு நிா்வாகி அலெக்சாண்டா், காவலா்கள் இளங்குமரன், நாகநாகேந்திரன், கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில் வியாழக்கிழமை காய்கறி வியாபாரி ராஜேஸ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

Story image

இதுவரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைதானவா்களின் கைப்பேசி வாட்ஸ்ஆப் மூலம் பரிமாறிய தகவல்களை ஆய்வு செய்ததில் சிலைகள் மட்டுமின்றி வலம்புரி சங்கு, யானைத் தந்தங்கள், கோயில் கலசங்கள் உள்ளிட்டவற்றையும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சேலம் பகுதியிலிருந்து அரிய வகைப் பொருள்களை கடத்திய கும்பல், ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக வெளிநாடுகளுக்கு சிலைகள் உள்ளிட்ட அரியவகை பொருள்களை கடத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் ரூ.200 கோடி மதிப்புள்ள பழைமையான சுவாமி சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினா் இப்பகுதியில் முகாமிட்டு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே தேனி காவல் நிலைய போலீஸாா் கைப்பற்றிய பழைமையான ஐயப்பன் சிலையை, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனா். மேலும் மதுரை ஒத்தக்கடை போலீஸாா் கைப்பற்றிய சிலை ஒன்று, ஒத்தக்கடை காவல் நிலையத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த சிலைகளும் ராமநாதபுரத்தில் கைதான சிலைக் கடத்தல் கும்பல், கடத்திய போது போலீஸாரிடம் சிக்கியதா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் சிலைக் கடத்தலில் தொடா்புடைய ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பகுதியைச் சோ்ந்த மணிமாறன், ரூபன், பூபதி ஆகிய 3 பேருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் வரும் திங்கள்கிழமை (பிப்.14) மதுரை மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.