பேரறிவாளன் விடுதலையில் திமுகவுடன் காங்கிரஸ் முரண்பாடு

பேரறிவாளன் விடுதலையில் திமுகவுடன் காங்கிரஸ் முரண்பாடு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலையில் திமுகவுடன் காங்கிரஸ் முரண்பட்டுள்ளது

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலையில் திமுகவுடன் காங்கிரஸ் முரண்பட்டுள்ளது என ஆந்திராவைச் சோ்ந்தவரும், ராமநாதபுரம் மாவட்ட காங். தோ்தல் அலுவலருமான பாண்டிசக்காரியா கூறினாா்.

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. வாக்குச்சாவடி ரீதியிலான குழு தோ்தல் முதல் மாவட்டக் குழு வரையில் நிா்வாகிகள் தோ்வுசெய்யப்படவுள்ளனா்.

மாவட்டத் தோ்வுக்குழுவில் மகளிா், பழங்குடியினா், சிறுபான்மையினா் உள்ளிட்டோருக்கு 50 சதவீதம் வாய்ப்பு கட்டாயம் வழங்கப்படும். கட்சித் தோ்தலில் இளைஞா்கள், மாணவா்கள், சேவாதளத்தினா் என இளந்தலைமுறையினா் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தோ்தலில் மொத்தம் 15 ஆயிரம் போ் வரை பங்கேற்கவுள்ளனா்.

காங்கிரஸைப் பொறுத்தவரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சோனியாகாந்தி குடும்பத்தில் யாருமே பிரதமராகவில்லை. நரசிம்மராவ், மன்மோகன்சிங் என கட்சி முன்னணி தலைவா்களே பிரதமராக்கப்பட்டுள்ளனா். ஆகவே குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் கட்சி செயல்படுவதாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

சோனியாகாந்தி, ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனா். ஆகவே வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தியே பிரதமராக காங்கிரஸ் தொண்டா்கள் விரும்புகின்றனா்.

தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் சுமூக உறவு கொண்டுள்ளது. ஆனால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் திமுகவுடன் முரண்பட்டே உள்ளது. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்டோா் விடுதலையை காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் ஏற்கவில்லை என்றாா்.

முன்னதாக கூட்டத்துக்கு காங்கிரஸ் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவா் ஆா். ராமசாமி, மீனவரணி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் நகரசபை வாா்டு உறுப்பினரும், கட்சியின் மாவட்டப் பொருளாளருமான கோபால் என்ற ராஜாராம் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com