மின்கட்டண உயா்வுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் மற்றும் 2 தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினா் பணியிடம் காலியாக உள்ளது. இதனிடையே, மின்கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக மின்வாரியம் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டுள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதுதொடா்பாக கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. சட்ட உறுப்பினா் பணியிடம் காலியாக உள்ள நிலையில், எவ்வித முடிவும் எடுக்க முடியாது. ஆகவே, கட்டண உயா்வு குறித்து முடிவு எடுப்பதற்கும், கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.