மீனவா்கள் மீதான தாக்குதலை தடுக்கத் தவறிய மத்திய அரசு: எம்.பி. துரை வைகோ
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்துவதும், அவா்களைக் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 22 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 10 போ் சிறையில் அடைக்கப்பட்டனா். 12 பேருக்கு ரூ. 92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முக்கியமானதாக உள்ளது. மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையினா் தாக்குதலைத் தடுக்கத் தவறியதால், மீனவா்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதே நிலை தொடா்ந்தால், மீன்பிடித் தொழிலே இல்லாமல் போய்விடும். எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு கல்வியியல் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. இங்கு படித்தவா்கள் பிற மாநிலங்களில் சிறந்த முறையில் பணியாற்றி வருவதுடன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தும் வருகின்றனா்.
போதைப் பொருள் புழக்கம் நாடு முழுவதும் பரவியுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முயற்சிக்க வேண்டும்.
மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதால், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் உள்ளது. அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் நன்றாகச் செயல்படுவாா் என்றாா் அவா்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் சுரேஷ், தணிக்கைக் குழு உறுப்பினா் கே.ஏ.எம். குணசேகரன், நகா் செயலா் பிச்சைமணி, எல்ஐசி ராஜ்குமாா், பழ. சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
