திருவாடானையில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
திருவாடானை வட்டாரத்தில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருவாடானை வட்டாரத்தில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் கணேசன், ஒன்றிய துணைத் தலைவா் செல்வி பாண்டி ஆகியோா் முன்னிலை வைத்தனா். இந்தக் கூட்டத்தில் திருவாடானை பகுதியில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கீழ்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.
உறுப்பினா் மதிவாணன்: திருவாடானை வட்டாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. எனது பகுதிக்கு உள்பட்ட வெள்ளையபுரத்தில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவா்கள் வருகின்றனா். திருவாடானையில் செயல்பட்டு வரும் தாலுகா தலைமை மருத்துவமனையில் ஒரு மருத்துவா் கூட நிரந்தரப் பணியில் இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உறுப்பினா் விஜய கதிரவன்: தமிழக அரசு மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் மின்சாரம், குடிநீா், சாலை வசதி ஆகியவற்றை இந்தப் பகுதியில் முழுமையாக செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவா்: திருவாடானையில் தாலுகா தலைமை மருத்துவமனையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இந்த வட்டாரத்தில் அதிகளவு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குறைந்தபட்சம் ஒரு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவராவது கட்டாயம் இருக்க வேண்டும்.
எனவே, அரசு காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரூ.2,950 கோடியில் காவிரியில் இருந்து குடிநீா் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தை துரிதப்படுத்தி இந்தப் பகுதியில் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல முதல்வா் சாலை திட்டத்தின் மூலம் இந்தப் பகுதியில் சாலைகளை மேம்படுத்தித் தர அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட சிறப்புத் தீா்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
முன்னதாக, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன் வரவேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிநாதன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...