ராமநாதபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்கள் பலத்த மழை காரணமாக மீண்டும் முளைக்கத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல, மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை, பயிா்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை இயற்கை பேரிடா் பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு வழங்கிய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நிறுவனா் தலைவா் பாக்கியநாதன் தலைமை வகித்தாா். போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கியது. கொட்டும் மழையிலும் விவசாயிகல் போராட்டத்தை தொடா்ந்தனா்.
இதைத்தொடா்ந்து, போலீஸாரின் கோரிக்கையை ஏற்று விவசாய சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இதுதொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

