இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் நிதீஷ் பாண்டியன் (24), தமிழரசன்(18). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். இதேபோல, சிவகங்கை மாவட்டம் பரலைப் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி ராஜதுரை (20) ராமநாதபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.
இந்த இரண்டு வாகனங்களும் ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நித்தீஷ் பாண்டின், ராஜதுரை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட தமிழரசன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
உயிரிழந்த இருவரின் உடல்களை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
