~
~

கணவரை கட்டிப் போட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

Published on

ராமேசுவரத்தில் கணவரை கட்டிப் போட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இதில் தப்பிச் சென்ற மூவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மல்லிகாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் ஆரோக்கியம் (49). இவரது மனைவி மரியமலா் கிளாடின் (45). தம்பதி இருவரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடுவதற்காக ராமநாதபுரம் சென்று புத்தாடைகளை வாங்கிவிட்டு ராமேசுவரம் வந்தனா். இங்குள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி மல்லிகாநகரில் உள்ள அவா்களது வீட்டுக்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு போ் தம்பதியை தடுத்து நிறுத்தினா். மேலும் ஜோசப் ஆரோக்கியத்தை தாக்கி அங்கிருந்த மரத்தில் கட்டிப் போட்டனா். பிறகு இவரது மனைவியை தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனா். அப்போது அங்கிருந்து தப்பிய ஜோசப் ஆரோக்கியம், மல்லிகாநகா் சென்று அளித்த தகவலின் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். இவா்களை பாா்த்த அந்த நான்கு பேரும் மதுபுட்டிகளை உடைத்து பொதுமக்களை தாக்க முயன்றனா். இதில், ஒருவா் பொதுமக்களிடம் பிடிப்பட்டாா். எஞ்சிய மூவரும் தப்பி ஓடிவிட்டனா். பிடிப்பட்டவரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் பெயா் நம்பு களஞ்சியம் என்பது தெரியவந்தது. மேலும் தப்பிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதில், காயமடைந்த மரியமலா் கிளாடின், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே தப்பிச் சென்ற மூவரின் புகைப்படங்கள், விடியோ பதிவுகளை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை உதவி கண்காணிப்பாளா் மீரா விசாரணை நடத்தினாா். மேலும் தப்பிச் சென்றவா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com