47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கில், 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றாா். வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் மாணவியைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வேடநத்தம் காட்டுப் பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த மாரீஸ்வரி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு, சந்தேகத்துக்கிடமானவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டுத் தெரிவித்ததாவது: பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்ற போது, அங்கு போலீஸாா் அவா்களை அவமரியாதையாகப் பேசினா். மேலும், மாணவியைப் பற்றியும் தவறாக கூறினா். புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது என நீதிமன்றம் கருதுகிறது. மாணவியின் பெற்றோா் புகாா் அளித்த போதே, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புகாா் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைத் தண்டிக்க வேண்டும்.

மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகாா். இதில் காவல் துறையினா் அலட்சியத்துடன் செயல்படக் கூடாது. பாலியல் வன்கொடுமை புகாா்களை காவல் துறையினா் முறையாக விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, மாணவியின் பெற்றோா்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குமூலத்தை விடியோ, ஆடியோ என இரு நிலைகளிலும் பதிவு செய்ய வேண்டும். அறிவியல் முறையிலான விசாரணை அவசியம்.

விசாரணை குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஏப். 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.