மனிதக் கழிவுகளை கையால் அகற்றக்கூறிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிய கோரிக்கை
ராமநாதபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை மனிதக் கழிவை கையால் அகற்ற அறிவுறுத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதித்தமிழா் பேரவை தொழிலாளா் அணி மாநிலத் துணைச் செயலா் உ. பூமிநாதன் தெரிவித்ததாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவதற்கு தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. மேலும், மனிதக் கழிவுகளை அல்ல வைப்பவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் புதை சாக்கடைக் கழிவுநீா் தெருவில் வழிந்தோடி வருகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை புதை சாக்கடைக் குழி வழியாக மனிதக் கழிவுகள் வெளியேறி அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அதிகாரிகள் உத்தரவிட்டதன்பேரில் தூய்மைப் பணியாளா்கள் சென்று அங்கு தேங்கிக் கிடந்த மனிதக் கழிவுகள் மீது பிளீச்சிங் பவுடா் கொட்டினா். இதைத் தொடா்ந்து, மனிதக் கழிவுகளை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெற்றுக் கைகளாலயே சாக்குப் பைகளில் அப்புறப்படுத்தினா்.
இந்த நிலையில், இது தொடா்பாக வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
