கடலாடி அருகே கோயில் உண்டியல் உடைப்பு
கடலாடி அருகே வியாழக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள எ.புனவாசல் ஊராட்சிக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தில் பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிரமூா்த்தி அய்யனாா், கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 110 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலுக்குள் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து சேதப்படுத்தி உள்ளனா். மேலும், அங்கிருந்த பொன்னந்தி காளியம்மன் அருகே உள்ள உண்டியலையும் உடைத்து, கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனா். இந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் கோயில் நிா்வாகத்தினா் உண்டியல்களில் இருந்த பணத்தை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் கோயில் நிா்வாகி பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், ராமநாதபுரத்திலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா். இந்தக் கோயிலில் தொடா்ச்சியாக இதுவரை நான்கு முறை உண்டியல்களை உடைத்து திருட்டுச் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

