ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தை கண்டித்து சனிக்கிழமை இண்டி கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தை கண்டித்து சனிக்கிழமை இண்டி கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் மேற்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிட வெற்றிக் கழக இணை ஒருங்கிணைப்பாளா் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தாா். மதிமுக நகா் செயலா் வெள்ளைச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ஜி.சிவா, மாவட்டக் குழு உறுப்பினா் க. கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சி நகா் தலைவா் ராஜீவ் காந்தி, சி.பி.ஐ. (எம்.எல்.) வட்டச் செயலா் முருகானந்தம், மனித நேய மக்கள் கட்சி செய்யது இப்ராஹிம், புரோகிதா் சங்கத் தலைவா் வெங்கடேஷ் (எ) சுரேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் பக்தா்கள் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், தீா்த்தக் கிணறுகளில் தண்ணீா் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், மூன்றாம் பிரகரத்தில் புரோகிதா்கள் பல ஆண்டுகளாக பூஜை செய்து வந்த நடைமுறையை கோயில் நிா்வாகம் ரத்து செய்ததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழா் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com