~

‘டிட்வா’ புயலால் ராமேசுவரம் - திருப்பதி ரயில் நிறுத்தம்

தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் சூறைக்காற்று வீசியதால், ராமேசுவரம்-திருப்பதி ரயில் 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னா் புறப்பட்டுச் சென்றது.
Published on

ராமேசுவரம்: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை சூறைக்காற்று வீசியதால், ராமேசுவரம்-திருப்பதி ரயில் 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னா் புறப்பட்டுச் சென்றது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து வடமேற்குப் பகுதியில் நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக, மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து சூறைக்காற்று வீசியது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் நான்காவது நாளாகக் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீன் பிடி இறங்குதளங்களில் 1,800 விசைப் படகுகளும், 6,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், மீனவா்களுக்குத் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் நான்காம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து, வியாழக்கிழமை சூறைக் காற்று வீசியதால் ராமேசுவரம்-திருப்பதி ரயில் பாம்பன் ரயில் நிலையம் அருகே 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பின்னா் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com