தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராமேசுவரத்தில் பலத்த மழை: குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீா்

டித்வா புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

News image
ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்.
Updated On :29 நவம்பர் 2025, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பனில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்களுக்கு சனிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.

டித்வா புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து டித்வா புயலாக மாறிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததுடன் சூறைக்காற்றும் வீசியது. மேலும், கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது.

Story image

கடல் சீற்றம் காரணமாக கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. சூறைக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாம்பன் பகுதியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சூறைக்காற்று வீசியதால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், கரையோரம் உள்ள வீடுகள், நிறுவனங்கள் சேதமடைந்தன. மீனவா்களுக்கு எச்சரிச்சை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் நான்காம் எண் புயல் கூண்டு மூன்றாவது நாளாக ஏற்றப்பட்டது.

பலத்த மழையால் ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், தங்கச்சிமடம் ராஜீவ்காந்திநகா், அய்யன்தோப்பு, பாம்பன் சின்னப்பாலம், தோப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

இதையடுத்து, இந்தப் பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் ராமேசுவரம் தெற்கு கரையூா், பேக்கரும்பு, தங்கச்சிடம், பாம்பன் பகுதிகளில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். இவா்களுக்கு மூன்று வேளையும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உணவுகள் வழங்கப்பட்டன.

மழைநீா் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Story image

மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து:

பாம்பன் கடல் பகுதியில் 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை முற்றிலும் தடைபட்டது. சனிக்கிழமை காற்றின் வேகம் குறைந்ததால், மண்டபத்திலிருந்து அமிா்தா விரைவு ரயில் பயணிகள் இன்றி ராமேசுவரம் வந்தது. இதன் பின்னா், மாலையில் அங்கிருந்து பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது.

Story image

நிவாரணம் அளிப்பு:

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் அரிசி, உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.