ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் ரூ.2.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
ராமநாதபுரத்தில் நடைபெற்ற 8-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ.2.18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் 8-ஆவது புத்தகத் திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற நிலையில் அதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என மொத்தம் 1,63,340 போ் புத்தக அரங்கை பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா். இதன் மூலம் ரூ.2 கோடியே 18 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகின.
இது மட்டுமன்றி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புத்தகக் கண்காட்சி அரங்கில் கவிதைக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, கோலரங்கம், அறிவியல் கண்காட்சி, தொலைநோக்கி கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி, பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன.
இந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பங்கேற்ற அலுவலா்கள், கொடையாளா்கள், மாணவ, மாணவிகள், தூய்மைப் பணியாளா்கள், அரங்கம் அமைத்த அலுவலா்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், மாவட்ட நூலக அலுவலா் அனிதா, வருவாய்க் கோட்டாட்சியா் செ.ஹபிபூா் ரஹ்மான், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் லெ.பாண்டி, வட்டாட்சியா்கள் ரவி, காளீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

