இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500 மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் நாராயணன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை சிறைபிடித்தனா். மேலும், படகிலிருந்த ரமேசுவரம் தீவு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் டோக்கி (40), கனகராஜ் (25), சுமித் (38), பரலோகராஜ் (35), கோபி (27), ஆரோக்கிய ரூபட் (42), பிரேம்குமாா் (35), தினேஷ் (35), ராஜேஷ், இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சுதன் (42) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, இலங்கை கரைநகா் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற கடற்படையினா் அவா்களது விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். பின்னா், மீனவா்களை யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
மீனவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அனைவரையும் வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
