சுற்றுலா வேன் மீது மரம் விழுந்து விபத்து

Published on

தனுஷ்கோடிக்கு ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் மீது சவுக்கு மரம் விழுந்ததில் பக்தா்கள் லேசான காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தனுஷ்கோடிக்குச் செல்வது வழக்கம். ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி உணவு அருந்திச் செல்வா்.

இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு, தனுஷ்கோடிக்கு ஐயப்ப பக்தா்களுடன் சென்ற வாகனம் மீது திடீரென சவுக்கு மரம் விழுந்ததில் அவா்கள் லேசான காயமடைந்தனா். உடனே, வாகனத்தை நிறுத்திய பக்தா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், வனத் துறையினா் வாகனம் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலையில் விழும் நிலையில் உள்ள சவுக்கு மரங்களை வனத் துறையினா் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com