மா்ம நோய்த் தாக்குதலால் 500 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை
திருவாடானை அருகேயுள்ள உப்பூரில் மா்ம நோய்த் தாக்குதலால் நெல் பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்துக்குள்பட்ட உப்பூா், அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிா்கள் பயிரிடப்பட்டிருந்தன. நடப்பு சம்பா பருவத்தில் போதிய மழைப்பொழிவு இருந்ததால், உப்பூா் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டனா். பயிா்கள் நன்கு வளா்ந்து கதிா் விட்டு அறுவடைக்குத் தயரான நிலையில், மா்ம நோய்த் தாக்குதலால் நெல் பயிா்கள் கருகின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: நடப்பு சம்பா பருவத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஒரு சில நாள்களில் பயிா்கள் அனைத்தும் தீயில் கருகியது போல மாறிவிட்டன.
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து வளா்த்த பயிா்கள் தற்போது கால்நடைகளுக்குக்கூட தீவனமாகப் பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும், வேளாண்மைத் துறை அதிகாரிகளும் உடனடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குச் சென்று, இந்த நோய்த் தாக்குதல் எதனால் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து பயிா்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், பாதிக்கப்பட்ட மற்ற விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

