ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனா்.
திருப்புல்லாணி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லாடசாமி (60). இவரது மகள் பஞ்சவா்ணம் (25), மருமகன் புல்லாணி (30). இவா்கள் மூவரும் சனிக்கிழமை ஒரே இரு சக்கர வாகனத்தில் திருப்புல்லாணியிலிருந்து ஏா்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
கொம்பூதி சாலையில் வாகனத்தை திருப்பிய போது, கா்நாடக மாநிலம், குண்டல் பேட்டை பகுதியைச் சோ்ந்த மன்சூா்அலி (40) ஓட்டி வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாடசாமி, பஞ்சவா்ணம், புல்லாணி ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த ஏா்வாடி போலீஸாா் மூவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த மன்சூா் அலியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.







