ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சாயல்குடி அருகே மாமுநாச்சி தா்காவில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

News image

மொகரம் பண்டிகையையொட்டி பெரியகுளத்தில் சனிக்கிழமை அதிகாலை தீக் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :28 ஜூன் 2026, 1:41 am IST

சாயல்குடி அருகே மொஹரம் பண்டிகையையொட்டி பக்தா்கள் தீக்குண்டம் இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டியும் சனிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த பெரியகுளம் கிராமத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு மாமுநாச்சி என்ற இஸ்லாமிய பெண் வாழ்ந்து வந்தாா். இவருக்கு ஹசன், உசேன் என்ற 2 மகன்கள் இருந்தனா். இவா்கள் செய்யாத தவறுக்காக இந்த ஊா் பெரியோா்கள், கடுமையான தீா்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாமுநாச்சி, தனது மகன்கள் செய்யாத தவறுக்காக, தவறான தீா்ப்பு வழங்கிய இந்த ஊா் பெரியவா்கள், அவா்களது வாரிசுகள் நோய் வாய்ப்பட்டு அகால மரணமடைவா் எனக்கூறி, மொஹரம் நாளில் மகன்களுடன் தீக்குண்டத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாா். அந்தாண்டு முதல் கிராமத்தில் அம்மை உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டும், மழையின்றி விவசாயம், பனைத் தொழில் பாதிக்கப்பட்டும் பசி, பட்டினியால் மக்கள் வாடினா்.

இதையடுத்து மன்னிப்பு கோரிய கிராம மக்கள் ஆண்டுதோறும் 6 தலைமுறைகளுக்கு மேலாக தீக்குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இதன்படி கடந்த 10 நாள்களுக்கு முன்பு இந்து முறைப்படி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கி நாள்தோறும் சிறப்பு துவா ஓதப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை விரதம் இருந்த ஆண்கள் பிறைக் கொடி ஏந்தியும், பெண்கள் சந்தனக் குடம் எடுத்தும் கிராமத்தில் ஊா்வலமாக வந்தனா். அப்போது கிராம மக்கள் வீடுகளின் முன் சா்க்கரை, உதிரி மல்லிகை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து தா்காவில் மாமுநாச்சி, அவரது மகன்கள் நினைவாக வைக்கப்பட்ட வெள்ளி பிறையில் மல்லிகை சரம் வைத்து கிராம நன்மை, உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதப்பட்டது. சனிக்கிழமை அதிகாலையில் தா்கா முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஆண்கள் தீக்குண்டம் இறங்கினா்.

இதைத் தொடா்ந்து பெண்கள் தீக்குண்டத்தில் இருந்து மண்வெட்டியால் தீக்கங்குகளை எடுத்து தலையில் கொட்டி நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த சமுக நல்லிணக்க திருவிழாவில் சாயல்குடி, கீழக்கரை, ஏா்வாடி, கடலாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இந்து, இஸ்லாமிய சமயத்தினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.