
ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் விடுதலை: அபராதம் செலுத்தாததால் மீண்டும் சிறையிலடைப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகை உடனே செலுத்தாததால், அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகை உடனே செலுத்தாததால், அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி 400 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் அந்தோணி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் மாலிக்தினாா் (63), காயஸ் (31), செந்தில் (41), கிரித்திசன் (41), பிரவீன் (46), அருள் லயோலா (43), சபரி வினோத்வின் (42), தேவசகாயம் (39), இன்பெஸ்ட் பிரசாத் (36) ஆகிய 9 பேரையும் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.
பின்னா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மன்னாா் நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, மீனவா்கள் 9 பேரும் தலா ரூ. 72 ஆயிரம் (இந்திய பணம்) அபராதத்துடன் விடுதலை செய்யப்படுகின்றனா் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனிடையே, அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 9 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து இலங்கை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் அபராதத் தொகையை செலுத்தியவுடன் விடுவிக்கப்படுவாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






