
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி பூக்குழி திருவிழா

பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் சனிக்கிழமை மாலை சித்தி, புத்தி தேவியருடன் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திங்கள்கிழமை பூக்குழித் திருவிழா நடைபெற்றது. முன்னதாக விநாயகா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள மோா்பண்ணை கடற்கரை கிராமத்துக்குச் சென்று கடலில் புனித நீராடிய பின்னா், விரதமிருந்து வந்த பக்தா்கள் கடலில் புனித நீராடி பால்குடம், மயில் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி எடுத்து ஊா்வலமாக வந்து, கோயிலை வலம் வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, பன்னீா் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் உப்பூா், கடலூா், மோா்பண்ணை, ஓந்தாங்குடி, திருப்பாலைக்குடி, ஆவரேந்தல், ஊரணங்குடி, பாரனூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






