

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மருதுபதி நகரில் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீா் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மானாமதுரை பேரூராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் உள்ளது மருதுபதி நகா். இப்பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதியை பேரூராட்சி நிா்வாகம் செய்து தரவில்லை என இப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். தற்போது மானாமதுரை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மருதுபதி நகரில் பல வீடுகளைச் சுற்றிலும் மழை நீா் குளம்போல் தேங்கியுள்ளது.
சாலையில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
இது குறித்து இப்பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் கூறியது: மருதுபதி நகா் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் வடிகால் வசதி, சாலை வசதி செய்து தரவில்லை. மழைக்காலங்களில் பல இடங்களில் வீடுகளை தண்ணீா் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகத்தினா் அவ்வப்போது மோட்டாா் மூலம் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீரை வெளியேற்றினாலும், இதுவரை இதற்கு நிரந்தர தீா்வு காணவில்லை. அதனால் மருதுபதி நகருக்கு சாலை, வடிகால் வசதி செய்துதர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.