

மானாமதுரை அருகே ரேஷன் பொருள்கள் வாங்க 3 கிராம மக்கள் 10.கி.மீ தூரம் நடந்து சென்று திரும்பும் நிலை உள்ளதால் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ரேஷன்கடை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்தது சோமாத்தூர், மானங்காத்தான், புலிக்குளம் கிராமங்கள், இங்கு வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10.கி.மீ தூரமுள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில் ரேஷன்கடை உள்ளது.
இதனால் மேற்கண்ட கிராம மக்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்குள் தங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களை வாங்க நீண்டதூரம் நடந்து வந்து பொருள்களை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. மேலும் ஆட்டோ, இரு சக்கர வாகனம் அல்லது பஸ்சில் கரிசல்குளம் வந்துதான் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதால் வீண் அலைச்சலும் கூடுதல் செலவும் ஏற்படுவதாக இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முதியவர்கள் பொருள்கள் வாங்க மற்றவரிடம் ரேஷன்கார்டை கொடுத்துவிட்டாலும் கடையில் உள்ள விற்பனையாளர் யார் பெயரில் ரேஷன்கார்டு உள்ளதோ அவர்கள் நேரடியாக வந்தால்தான் பொருள்கள் தர முடியும் என கூறுவதால் முதியவர்கள் மிகுந்த சிரமத்துடன் வந்து உணவுப் பொருள்களை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது.
சோமாத்தூர், மானங்காத்தான், புலிக்குளம் கிராம மக்கள் நீண்டதூரம் சென்று ரேஷன் பொருள்கள் வாங்க முடியாததால் சோமாத்தூர் கிராமத்தில் தங்களுக்கு ரேஷன்கடை அமைத்துக்கொடுத்தால் கிராம மக்கள் சிரமமின்றி ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்வார்கள், வீண் அலைச்சல், பணச்செலவு ஏற்படாது என தெரிவித்து இக்கோரிக்கையை பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எனவே இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராம மக்களுக்காக சோமாத்தூர் கிராமத்தில் ரேஷன்கடை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.