ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் லாரிகளில் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,302 வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.