மானாமதுரை பகுதியில் மழை: நிலாச்சோறு மண்டகப்படி பாதிப்பு

மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் இங்கு நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில்
மழையால் வைகை ஆற்றுக்குள் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்ட நிலாச்சோறு மண்டகப்படி.
மழையால் வைகை ஆற்றுக்குள் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்ட நிலாச்சோறு மண்டகப்படி.

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் இங்கு நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் அமைக்கப்பட்ட கடைகளில் வியாபாரம், பாதிக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் ராட்டினம் அமைப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

நிலாச்சோறு  மண்டகப்படிக்கு  மக்கள் வராமல் வீடுகளுக்குள் முடங்கியதால் இரவு ஆற்றுக்குள் எழுந்தருளியிருந்த அழகரைக் காண பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று வந்த ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. 

மானாமதுரை சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு மண்டகப்படியின்போது  சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த ஸ்ரீ வீர அழகர்.
மானாமதுரை சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு மண்டகப்படியின்போது  சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த ஸ்ரீ வீர அழகர்.

இந்த திருவிழாக்களுக்காக வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள் மற்றும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழா தொடங்குவதற்கு முன்னால் நகராட்சி நிர்வாகம் சார்பில் வைகையாறு சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் திருவிழா நாள்களில் அவ்வப்போது மழை பெய்ததால் சுத்தம் செய்யப்பட்ட பகுதிகள் சகதி காடாக மாறின. 

இதனால் திருவிழா பார்க்க வந்த மக்கள் அவதிப்பட்டனர். கடைகளில் வியாபாரம் குறைந்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். ராட்டினங்களில் ஏறி சுற்றும் கூட்டமும் குறைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து சில நாள்கள் மழை பெய்யாமல் வெயில் அடித்ததால் திருவிழா நாள்களின் இரவுகள் மீண்டும் களைகட்டத் தொடங்கின.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை வைகை ஆற்றில் அழகர் இறங்கினார். அப்போது நல்ல வெயில் அடித்தது. பிற்பகல் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்குவதற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மானாமதுரை வைகையை வந்தடைந்தது. திருவிழா கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். 

மானாமதுரை வைகையாற்றுக்குள்  காலியாக இயகப்பட்ட ராட்டினங்கள்.
மானாமதுரை வைகையாற்றுக்குள்  காலியாக இயகப்பட்ட ராட்டினங்கள்.


வைகையாற்றுக்குள் அழகருக்காக அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படி பந்தலுக்கு தண்ணீர் வராதவாறு ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியின்போது இரவு நிலாச்சோறு வைபவம் நடைபெறும். மானாமதுரை பகுதியைச் சேர்ந்த மக்கள் உணவு வகைகளை தயார் செய்து கொண்டு வைகை ஆற்றுக்குச் சென்று குடும்பத்தினர், நண்பர்களுடன் நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.  
நிலாச்சோறு மண்டகப்படிக்காக  இங்குள்ள இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பகலில் சுள்ளென வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகல் வானத்தில் மழை மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டு இரவு பொழுது தொடங்கியும் கூட மின் வினியோகம் சீராகவில்லை. இதனால் மானாமதுரை நகரம் இருளில் மூழ்கியது. 

ஆற்றுக்கு நிலாச்சோறு நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்து மக்கள் தாங்கள் தயாரித்த  உணவுகளை வீடுகளிலேயே வைத்து சாப்பிட்டனர். மேலும் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் எழுந்தருளி இருந்த அழகரை குறைவான பக்தர்களே குடை பிடித்துக் கொண்டு வந்து தரிசனம் செய்து விட்டு உடனடியாக வீடு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com