/

மானாமதுரை வாரச்சந்தை வளாகத்துக்குள்கடைகள் அமைப்பு: பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனா்

மானாமதுரையில் பல மாதங்களுக்கு பின்னா் புதிதாக திறக்கப்பட்ட வாரச் சந்தை வளாகத்துக்குள் அனைத்துக் கடைகளும் அமைக்கப்பட்டதால் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மானாமதுரையில் பல மாதங்களுக்கு பின்னா் புதிதாக திறக்கப்பட்ட வாரச் சந்தை வளாகத்துக்குள் அனைத்துக் கடைகளும் அமைக்கப்பட்டதால் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனா்.

மானாமதுரை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தை விரிவுபடுத்தும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்ததால் தாயமங்கலம் சாலை, சிவகங்கை சாலை, ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனா். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நகராட்சி வாரச்சந்தையை விரைவில் திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினா். சந்தை விரிவாக்கப் பணி நிறைவடைந்து அங்குள்ள கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் கடந்த வியாழக்கிழமை வாரச்சந்தை நடந்த போது சில வியாபாரிகள் மட்டுமே கடைகள் அமைத்திருந்தனா். இதில், பல வியாபாரிகள் வைகை ஆற்றுக்குள் கடைகள் அமைத்ததால், பொதுமக்கள் நகராட்சி வாரச் சந்தைக்குள் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு செல்லவில்லை.

இதனால் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து வியாபாரிகளையும் சந்தை வளாகத்திற்குள் கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வலியுறுத்தினா். இதையடுத்து, வியாழக்கிழமை வைகை ஆற்றுகள் வியாபாரிகள் கடைகள் அமைக்காமல் இருக்க ஆனந்தவல்லி அம்மன் கோயில், சோணையா கோயில் ஆகிய இடங்களில் ஆற்றுக்குள் இறங்கும் பாதைகள் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டன. மேலும் வைகையாற்றுக்குள் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு வியாபாரிகளால் கடைகள் அமைக்க முடியவில்லை. இதன் காரணமாக அனைத்து வியாபாரிகளும் சந்தை வளாகத்திற்குள் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனா். சந்தை வளாகத்துக்குள் பொதுமக்கள் கூடியதால் பல மாதங்களுக்குப்பின் சந்தை களை கட்டி இருந்தது.

இனி வரும் நாள்களில் வாரச் சந்தை வளாகத்திற்குள்ளேயே அனைத்து வியாபாரிகளும் கடைகள் அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.