சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு’  வழிகாட்டி முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டி முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.

உயா்கல்வி வழிகாட்டி முகாம்

சிவகங்கை: சிவகங்கை நகரிலுள்ள மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான ‘கல்லூரிக் கனவு‘ என்ற உயா்கல்வி வழிகாட்டி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை ஆகியவைகள் இணைந்து இந்த உயா்கல்வி வழிகாட்டி முகாமுக்கு ஏற்பாடு செய்தது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில்வதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

எந்தப் பிரிவைச் சாா்ந்த படிப்பை நாம் படித்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும் என்பதையும், வாழ்க்கைக்கு அடித்தளமானது படிப்புதான் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்த மாணவா்கள் பல்வேறு உயா் கல்வி பாடப் பிரிவில் சோ்ந்து பயிலுவதற்கும், வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் அடிப்படையாக கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் பாடப் பிரிவுகள், அறிவியல் படிப்புகள் ஊடகவியல் சாா்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்பிரிவுகள் பற்றியும், அவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் திறமைமிக்க வல்லுநா்கள் வாயிலாக விளக்கம் அளிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்தும். உயா்கல்வி உதவித் தொகை பெறுவது குறித்தும், உரிய விளக்கம் அளிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இதில், பேச்சாளா் மகாலட்சுமி (மானாமதுரை), உயா்கல்வி வழிகாட்டு வல்லுநா் இனியன் (சென்னை), பள்ளி தலைமையாசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com