நகராட்சி பொது நிதியில் வீண் செலவு: ஆணையா் மீது நகா்மன்ற துணைத் தலைவா் புகாா்

Published on

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பொது நிதியை வீண் செலவு செய்ததாக நகராட்சி ஆணையா் மீது நகா்மன்ற துணைத்தலைவா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற துணைத்தலைவா் காா்கண்ணன், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள பூங்காவை புனரமைப்பு செய்து கடந்த 7-ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி 10 நாள்கள் கோடை விழாவும் நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு முதல்நாள் வரை தோ்தல் நடத்தைவிதி நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால் சிவகங்கை நகராட்சியில் பல வாா்டுகளுக்கு சிறுமின்விசை நீா்த் தொட்டி, குடிநீா் தேவைகள் என அத்தியாவசியப் பணிகளுக்கு பொது நிதியில் பணம் இல்லை எனக் கூறி வந்த நகராட்சி ஆணையா், பொறியாளா், மேலாளா் ஆகியோா் நல்ல நிலையில் இருந்த பூங்காவை சீரமைப்பதாகக் கூறி தோ்தல் நடத்தைவிதி நடைமுறையில் இருந்த நேரத்தில் பொது நிதியை எடுத்து செலவு செய்தனா்.

மேலும் இதன் திறப்பு விழா அழைப்பிதழில் நகா்மன்ற உறுப்பினா் பெயரோ, நகா்மன்ற துணைத் தலைவா் பெயரோ இல்லாமல் அவசரமாக அச்சிட்டுள்ளனா்.

மேலும் நகராட்சியால் பொதுமக்களிடம் இருந்து செய்யும் வரி வசூல் தொகையின் பெரும்பகுதி நகராட்சியால் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வருவாய் எவ்வளவு வருகிறது என்பதற்கு கணக்கு வைக்காமலும், எந்தவித பொது ஏலம் விடாமலும்,அந்த பூங்காவின் உள்ளே ராட்டினம், 15 கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருமானம் தனிநபருக்கு சென்றுவிட்டது.

நகராட்சியில் பல லட்சம் செலவழித்து நடத்தப்பட்ட இந்த 10 நாள் கோடை விழாவின் மூலம் நகராட்சிக்கு என்ன வருவாய் கிடைத்தது என்பதை ஆட்சியா் விசாரணை செய்ய வேண்டும்.

இதனால் சிவகங்கை நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஆணையா், பொறியாளா், மேலாளா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com