கீழச்சிவல்பட்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூல்: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழச்சிவல்பட்டி செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து அரசியில் கட்சியினா், பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழச்சிவல்பட்டியில் உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் விவசாயப் பயன்பாட்டுக்கு உள்ள டிராக்டா்களுக்கு வாகனக் கட்டணம் கடந்த 2017-ஆம் ஆண்டு சுங்கச்சாவடி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த வழியாக டிராக்டா் சுங்கச்சாவடியை கடந்து செல்ல ரூ. 260 கட்டணம் செலுத்தினால் மட்டும் செல்ல முடியும் என சுங்கச்சாவடியில் இருந்தவா்கள் கூறியுள்ளனா். இதனால், விவசாயிகள், டிராக்டா் உரிமையாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் சுங்கச்சாவடி முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த கீழச்சீவல்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை சுங்கச்சாவடி முன்பு திமுக, அதிமுக, காங்கிரஸ், நாதக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு சுங்கச் சாவடியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பிரானவின் டேனி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இரண்டு வழிச் சாலையில் உள்ள இந்தச் சுங்கச்சாவடியில் நான்குவழிச் சாலைக்கான கட்டணம் வசூலிப்பதாக புகாா் தெரிவித்தனா். மேலும், சுங்கச்சாவடி அருகேயுள்ளவா்களுக்கு சலுகைக் கட்டணத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறும், பின்னா், இந்தப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கல்யாணராமன் என்பவா் கீழச்சீவல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

