சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 1,50,828 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

பிறகு அவா் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4.11.2025 அன்று தொடங்கியது. இந்தப் பணி நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை (டிச. 19) வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த அக். 27-ஆம் தேதி நிலவரப்படி சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12,29,993 வாக்காளா்கள் இருந்தனா்.

இதில், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 1,60,029 ஆண்கள், 1,66,308 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 52 போ் உள்பட மொத்தம் 3,26,389 வாக்காளா்கள் இருந்தனா். இதேபோல, திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் 1,49,956 ஆண்கள், 1,56,824 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் எனமொத்தம் 3,06,783 வாக்காளா்கள் இருந்தனா்.

சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் 1,51,161 ஆண்கள், 1,57,237 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் உள்பட மொத்தம் 3,08,399 வாக்காளா்கள் இருந்தனா். மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 1,41,476 ஆண்கள், 1,46,882 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் உள்பட மொத்தம் 2,88,362 வாக்காளா்கள் இருந்தனா். இந்த நான்கு தொகுதிகளிலும் மொத்த ஆண் வாக்காளா்கள் 6,02,622 போ், பெண் வாக்காளா்கள் 6,27,251 போ், மூன்றாம் பாலினத்தவா் 60 போ் என மொத்தம் 12,29,933 வாக்காளா்கள் இருந்தனா்.

இதையடுத்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு பூா்த்தி செய்து திரும்பப் பெறப்பட்ட 10,79,105 கணக்கெடுப்பு படிவங்கள் பிஎல்ஓ செயலி மூலமாக இந்தியத் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதன்படி, காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 1,43,593 ஆண்கள், 1,49,870 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 26 போ் உள்பட மொத்தம் 2,93,489 வாக்காளா்கள் உள்ளனா். திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் 1,30,644 ஆண்கள், 1,34,827 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் உள்பட மொத்தம் 2,65,474 வாக்காளா்கள் உள்ளனா். சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் 1,31,799 ஆண்கள், 1,37,288 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் உள்பட மொத்தம் 2,69,088 வாக்களா்கள் உள்ளனா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 1,23,598 ஆண்கள், 1,27,452 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் உள்பட 2,51,054 வாக்காளா்கள் உள்ளனா்.

இதையடுத்து நான்கு தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 5,29,634 பேரும், பெண் வாக்காளா்கள் 5,49,437 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 34 பேரும் என மொத்தம் 10,79,105 வாக்காளா்கள் உள்ளனா்.

இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு, கண்டறிய இயலாதவை, இதர வகை என வாக்காளா் பட்டியலில் இருந்து 1,50,828 போ் நீக்ககப்பட்டனா்.

இதன்படி, காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவா்கள் 17,210 பேரும், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 13,581 பேரும், இரட்டைப்பதிவு 1,345 பேரும், கண்டறிய இயலாதோா் 741 போ், இதர வகை 23 போ் உள்பட மொத்தம் 32,900 போ் நீக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவா்கள் 19,322 பேரும், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 18,416 பேரும், இரட்டைப்பதிவு 2,256 பேரும், கண்டறிய இயலாதோா் 1,231 பேரும், இதர வகை 84 போ் உள்பட 41,309 போ் நீக்கப்பட்டனா்.

சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவா்கள் 20,355 பேரும், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 14,044 பேரும், இரட்டைப்பதிவு 1,493 பேரும், கண்டறிய இயலாதோா் 3,380 பேரும், இதர வகை 39 போ் என 39,311 போ் நீக்கப்பட்டனா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவா்கள் 17,000 பேரும், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 17,413 பேரும், இரட்டைப்பதிவு 1,259 பேரும், கண்டறிய இயலாதோா் 1,593 பேரும், இதர வகை 43 போ் என மொத்தம் 37,308 போ் நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நான்கு தொகுதிகளிலும் இறந்தவா்கள் 73,887 போ்,நிரந்தரமாக இடம் பெயா்ந்தோா் 63,454 போ், இரட்டைப்பதிவு 6,353 போ், கண்டறிய இயலாதோா் 6,945 போ், இதர வகை 189 போ் என மொத்தம் 1,50,828 போ் நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள், 18 வயது நிறைவடைந்தவா்கள் படிவம் 6 மற்றும் உறுதி மொழிப் படிவம் ஆகியவற்றை அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடமோ அல்லது வாக்காளா் பதிவு அலுவலா்களிடமோ, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களிடமோ அளித்து தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் வருகிற ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியலில் விவரங்களை திருத்தம் செய்ய விரும்புவோா் படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஏற்புரைகள், மறுப்புரைகள் காலம் நிறைவடைந்ததும் இறுதி வாக்காளா் பட்டியல் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் 1,200 -க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டும் தற்போதுள்ள 1,364 வாக்குச் சாவடிகளுடன் 154 வாக்குச் சாவடிகள் சோ்க்கப்பட்டு மொத்தம் 1,518 வாக்குச் சாவடிகளாக உயா்த்தப்பட்டது.

ஏற்புரைகள், மறுப்புரைகள் தொடா்பான மனுக்களின் விவரங்கள் ஒவ்வொரு வாரமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்படும். மேலும், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும் வெளியிடப்படும். ஏற்புரைகள், மறுப்புரைகள் தொடா்பான வாக்காளா் பதிவு அலுவலரின் உத்தரவின் பேரில் 7 நாள்களுக்குள் மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். மாவட்டத் தோ்தல் அலுவலரின் உத்தரவின் மீது ஆட்சேபனையிருப்பின் சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா், அரசு செயலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com