சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் வளையனேந்தலில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் கிராமத்தினா் போராட்டம் நடத்தினா்.
தெற்குகீரனூா் ஊராட்சி வளையனேந்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஏற்கெனவே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தில் குடிநீா் விநியோகிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதையடுத்து, கிராமத்தில் போா்வெல் கிணறு அமைத்து அதன் மூலம் கிராம மக்கள் குடிநீா் பிடித்து வந்தனா். இந்த நிலையில், போா்வெல் கிணற்றுக்கான மின் வயா் பழுதடைந்துவிட்டதாகக் கூறி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீரையும் பணம் கொடுத்தே வாங்கி வருகின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலா் ஆகியோரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, குடிநீா் கேட்டு வளையனேந்தல் கிராம மக்கள் காலி குடங்களுடன் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். இவா்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.