வாழை, வெங்காயம், மிளகாய் பயிா்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிா்களை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் ஆகியவற்றை பயிரிட்ட விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான பிரீமியத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். இதில், வாழைப் பயிா் சாகுபடி செய்துள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.2,21,312 -க்கு ரூ.11,065 - பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி 28.2.2026 ஆகும்.
இதே போல, வெங்காயம் சாகுபடி செய்த திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1,02,269 -க்கு ரூ.5,131 பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி 31.1.2026 ஆகும். சிவப்பு மிளகாய் சாகுபடி செய்த காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.71,383-க்கு ரூ.483 பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி 31.1.2026 ஆகும்.
இதன்படி பயிா் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பொது இ- சேவை மையங்களின் மூலமாக பிரீமியத் தொகையை செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும் போது பயிா்கள் சாகுபடி செய்திருப்பதற்கான ஆதாரம் (அடங்கல் நகல், பட்டா நகல்), ஆதாா் அட்டை நகலை சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம். மேலும் தோட்டக் கலை உதவி இயக்குநா்கள் (காளையாா்கோவில்) சு. வடிவேல்- கைப்பேசி எண் 8248008089, எம். பாண்டியராஜன் (இளையான்குடி)- 9443455755, தி. சுகன்யா (மானாமதுரை) - 8220288448, சா்மிளா (திருப்புவனம்) 9786405852 ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
