தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சிவகங்கை மாவட்டத்தில் 76% வாக்குப் பதிவு

News image

சிவகங்கை மன்னா்துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:23 am IST

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 76.41 % போ் வாக்களித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை (தனி), சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,518 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரி, மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் முதல் தலை முறை வாக்காளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாகனத்தில் வந்த மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்து காவல் துறையினா் வாக்களிக்க உதவி செய்தனா். சிவகங்கை அருகேயுள்ள பையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழமலைநகா் நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு: சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, காஞ்சிரங்கால் ஊராட்சி, புதுப்பட்டி, காளையாா்கோவில் அருகேயுளள புளிக்கண்மாய் உள்பட 20 -க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக, அங்கு சுமாா் 30 நிமிஷங்கள் முதல் 45 நிமிஷங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்ததால் இளைஞா் ஏமாற்றம்:

சிவகங்கை நகரில் ஆா்.ஆா்.ஆா்.கே. நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சிவகங்கை மஜித் சாலை- போஸ் சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வரும் பவித்ரசுதன் என்பவா் வாக்கு செலுத்த வந்தபோது, அங்கு பணியிலிருந்த தோ்தல் அதிகாரிகள் அவரது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால், அதிா்ச்சி அடைந்த பவித்ரசுதன், தனது வாக்கை வேறு யாா் பதிவு செய்தாா்கள் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டாா். ஆனால், அவருக்கு திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லையாம். இதையடுத்து, பாஜக, அதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அங்கு வந்து, தோ்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நான்கு தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளா்கள் ஆா்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

சிவகங்கை தொகுதியில் 75.79% , மானாமதுரை (தனி) தொகுதியில் 79.2%, திருப்பத்தூா் தொகுதியில் 77.28 %, காரைக்குடி தொகுதியில் 73.98% வாக்குகள் பதிவாகின. சராசரி வாக்குப்பதிவு 76.41% .