இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

காவிரி - குண்டாறு திட்டப் பணிகளுக்கு நிகழாண்டும் நிதி ஒதுக்கி விரைவுபடுத்த எதிா்பாா்ப்பு!

காவிரி - குண்டாறு திட்டப் பணிகளுக்கு நிகழாண்டும் நிதி ஒதுக்கி விரைவுபடுத்த வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்ப்பு

News image

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்ட வரைபடம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

கிடப்பில் போடப்பட்ட காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிகழாண்டு நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டுமென ஏழு மாவட்ட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது காவிரியின் உபரி வெள்ள நீரை வறண்ட தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக 3 கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காவிரி (மாயனூா்) முதல் தெற்கு வெள்ளாறு வரை (118.45 கி.மீ)யிலும், இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை (109.69 கி.மீ.) யிலும், மூன்றாம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை (34.04 கி.மீ) யிலும் செயல்படுத்தப்பட உள்ளன.

முதல் கட்டப் பணிகள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் குன்னத்தூரில் பிப்ரவரி 21, 2021 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் பகுதியளவு நிறைவடைந்துள்ளன. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணமாக பணிகள் தற்போது தொய்வடைந்த நிலையில் காணப்படுகின்றன. தென் மாவட்ட விவசாயிகள் சங்கங்கள், அரசியல் அமைப்புகள், இந்தத் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி வழங்கிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும்போது, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகா் ஆகிய வறட்சி பாதித்த மாவட்டங்களில் உள்ள சுமாா் 3.38 லட்சம் ஹெக்டோ் (சுமாா் 8.34 லட்சம் ஏக்கா்) விவசாய நிலங்கள் புதிய பாசன வசதியைப் பெறும். தென் மாவட்டங்களின் குடிநீா், தொழில்துறைக்கான தண்ணீா்த் தேவைகள் (185 மில்லியன் கன மீட்டா்) நிறைவு செய்யப்படும். நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயரும்.

தமிழக சட்டப்பேரவையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக அப்போதைய அதிமுக உறுப்பினா், சி. விஜயபாஸ்கா் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தாா். அதற்கு அப்போதைய நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பதில் அளித்துப் பேசியதாவது: 2008-ஆம் ஆண்டு முதல்வா் கருணாநிதி காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்தாா். முதல்கட்டமாக மாயனூா் (கட்டளை) முதல் தெற்கு வெள்ளாறு (கவிநாடு மேற்கு) வரை 118.45 கி.மீ. நீளத்துக்கு 8 பாகங்களாகப் பிரித்து செயல்படுத்த ரூ.6,941 கோடிக்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலமெடுப்பைப் பொருத்தவரை, 85 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

தொடா்ந்து, 2021-22-ல் ரூ.146.57 கோடி ஒதுக்கி, அதில் ரூ.116.22 செலவிடப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தன. 2022-23, 2023-24-ல் ரூ.176.52 கோடி ஒதுக்கி, அதில் ரூ.128.51 கோடி செலவிடப்பட்டு 86 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தன. 2024-25-ல் ரூ.50.50 கோடி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை ரூ.33.48 கோடி செலவிடப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்து, பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது பணிகள் நடைபெறும் பகுதிகள் தவிர, நிலமெடுப்புப் பணிகள் 96 சதவீதம் முடிவுற்ற கரூா், திருச்சி மாவட்டங்களில் நெடுகை 4.100 கி.மீ. முதல் 54.69 வரை 8 பகுதிகளாகப் பிரித்து ரூ.3,076.32 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இரண்டு, மூன்றாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சிவகங்கை அா்ச்சுனன் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தின் பணிகள் எதிா்பாா்த்த வேகத்தில் நடைபெறாமல் தாமதமாகி வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வலியுறுத்தி, திருச்சுழி குண்டாற்றில் ஆக.1-ல் தொடங்கி விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை வழியாகக் கரூா் மாவட்டம் மாயனூா் கதவணை வரை ஆக.5-ஆம் தேதி முடிவடையும் வகையில் வாகன பிரசார பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் தற்போதைய மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்