ஜல்லிக்கட்டு நடத்துவோா் ரூ.1 கோடிக்கு காப்பீட்டு ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவோா் ரூ.1 கோடிக்கான காப்பீட்டு ஆவணத்தை சமா்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினா், ஒருங்கிணைப்பாளா்கள் முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விழாக் குழுவினா் 30 நாள்களுக்கு முன்னரே அதற்கான ஆவணங்களான மனுதாரரின் கோரிக்கை மனு, ரூ.50- க்கான உறுதிமொழி முத்திரைத்தாள், ரூ.1 கோடிக்கான காப்பீட்டுத் தொகை ஆவணம், முந்தைய ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான அரசாணை, ஜல்லிக்கட்டு நடைபெறும் தளத்தின் புலப்படம், சிசிடிவி கேமரா, ஜல்லிக்கட்டு தளத்தில் அமைக்கப்பட்டதற்கான புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசிதழில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு, வடமாடு நிகழ்வுகளுக்குரிய ரூ.1 கோடி காப்பீட்டுக்கான ஆவணத்தை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சிரமம் இருப்பின் அதை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜல்லிக்கட்டு விழா குழுவினா் போட்டிக்கான ஏற்பாடுகளை விழா நடைபெறுவதற்கு முன்னா் குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்து பணிகளையும் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவித்தபடி நிறைவு செய்யும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிா்வாகத்தால் இறுதி உத்தரவு வழங்கப்படும்.
விழா அமைப்பாளா்கள், விழாவில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கவுள்ள காளைகள், வீரா்கள் குறித்த விவரங்களை அமைப்பாளா்கள், முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பங்கேற்பாளா்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விழா அமைப்பாளா்கள் விழாவில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு எந்தவித ஊக்க மருந்துகளோ, எரிச்சல் அளிக்கக் கூடிய பொருள்களையோ செலுத்தக் கூடாது. மேலும் காளைகளின் மீது ஜிகினா தூவுதல், கண்களில் எலுமிச்சைச் சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் கூடாது.
விழா அமைப்பாளா்கள், ஜல்லிக்கட்டை திறந்த வெளியில் நடத்த வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் மருத்துவ பரிசோதனை செய்யும் காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் ஷாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை பாதுகாக்க வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். மேலும், ஒரே தேதியில் விழா நடத்த விண்ணப்பிக்கப்படும் போது, முதல் விண்ணப்பம் மட்டும் அந்த தேதியில் நடத்த அனுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, கடந்த காலங்களைப் போன்று, இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
