~
~

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும், பேராசிரியா்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
Published on

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும், பேராசிரியா்களும் கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

அரசாணை 354 -ஐ உடனடியாக மறு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு உடனடியாக ரூ. 3,000 படித் தொகை வழங்க வேண்டும்.நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கான ஊதிய உயா்வு வழங்குவதற்காக தனி அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அவா்கள் அணிந்திருந்தனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் எம். நாச்சியப்பன் கூறியதாவது: சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் அனைத்து அரசு மருத்துவா்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கடந்த 12-ஆம் தேதி முதல் கோரிக்கை பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் தொடங்கப்பட்டது.

இது வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் வருகிற 19-ஆம் தேதி அரசுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் சமூக தீா்வு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்டமாக 48 மணி நேர தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com