சத்துணவு ஊழியா்கள் ஜன. 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வருகிற 20 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பான ஆயத்த மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் அ. பாண்டி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் பா. லதா பேசினாா். மாநிலச் செயலா் பி. பாண்டி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.
ஐந்து ஆண்டுகள் பணி முடித்த சமையலா் உதவியாளா்களை உடனடியாக சமையலா்களாகப் பதவி உயா்வு செய்ய வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் ரூ. 9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையல் எரிவாயு உருளைகளை சத்துணவு மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை மதிய உணவு ஊழியா்களுக்கே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா். முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ரேவதி வரவேற்றாா்.
