மானாமதுரையில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே குடிநீா்த் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே குடிநீா்த் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

மானாமதுரை பேருந்து நிலையம் பகுதியில் காவிரி குடிநீா்த் திட்டத்துக்காக பெரிய அளவிலான குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்து நிலையம் முன்புள்ள மேம்பாலம் அணுகு சாலைப் பகுதியில் இரு புறமும் நீண்ட தொலைவுக்கு ஆழமாக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது வெளியேற்றப்பட்ட மண், சாலை ஓரங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கடந்த இரு நாள்களாக மானாமதுரை பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த மண்ணில் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பரவி சாலைப் பகுதி முழுவதும் சகதியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், விபத்துகளும் நிகழ்கின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட துறை நிா்வாகத்தினா் குடிநீா்த் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com