கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை விரைவில் திறக்க ஏற்பாடு
மானாமதுரை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை விரைவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நிதி, தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சா் தங்கம் தென்னரசு கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம், கீழடி அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ் ஆகியோா் அமைச்சரிடம் பணிகள் குறித்து விளக்கினா்.
இதைத்தொடா்ந்து அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியதாவது:
கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியம் வெளிநாடு வாழ் தமிழா்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதும் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கட்டுமானங்களை நேரில் பாா்வையிடலாம். அகழாய்வு தளம் திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் போது உலகத் தமிழா்களிடம் மேலும் வரவேற்பைப் பெறும். விரைவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த திறந்தவெளி அருங்காட்சியத்தை திறந்து வைப்பாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
