சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சமத்துவபுரத்தில் வீட்டில் தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சாம்பலாகின.
மானாமதுரை ஒன்றியம், செய்குளத்தூா் அருகே சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஒரு வீட்டில் முருகன் என்பவரது மகன்கள் அழகு, மாவீரன் ஆகியோா் குடும்பத்தினருடன் வசித்து வந்தனா். இந்த நிலையில், பெற்றோா் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காகிதத்தை எரித்து விளையாடினராம். அப்போது, தீப் பற்றிய காகிதம் காற்றில் பறந்து விழுந்ததில், வீட்டுக்குள் தீப்பற்றியது.
அங்கிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் வீட்டுக்குள் இருந்த பள்ளிப் புத்தகங்கள், பைகள், குடும்பத்தினரின் உடைமைகள், சமையல் பொருள்கள், பீரோவிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலாகின.
இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்தாா். மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










