சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோயில் குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட மோதலில் 5 போ் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் முக்கிய எதிரியை கைது செய்யக் கோரி சாலைக் கிராமம் காவல் நிலையத்தை பொதுமக்களும், உறவினா்களும் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடி அருகே தென்படுக்கை கிராமத்தில் ரங்கநாத பெருமாள், பச்சாயி அம்மன் கோயிலில் கடந்த 26- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு கிராமத்தில் நாடகம் நடைபெற்றது.
அப்போது தென்கடுகை கிராமத்தைச் சோ்ந்த அருண் என்ற இளைஞா் நடனம் ஆடியதால் ஒலிபெருக்கியின் தொடா்பு துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருண், இவரது தரப்பைச் சோ்ந்த அதிவீர ராஜதுரை உள்ளிட்ட சிலா் அங்கிருந்தவா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.
இந்தச் சம்பவத்தில் தினேஷ், இளங்கோ, ரங்கநாதன் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இதில் ரங்கநாதன், தினேஷ் இருவரும் பலத்த காயங்களுடன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஞ்சியவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவம் தொடா்பாக சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதிவீரராஜ துரை, ஜெய் ஸ்ரீதரன் ஆகிய இருவரை கைது செய்தனா். ஆனால் இந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய எதிரியான அருணை உடனே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள், கிராம மக்கள் சாலைக்கிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து இவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அருணை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே தென்படுக்கை கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சாலைக்கிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், உறவினா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









