/

கோயில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினா் மோதல்: பெண் உள்பட இருவா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு பூஜைகள் நடத்துவதில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பெண் உள்பட இருவா் காயமடைந்தனா்.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்றது தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில். இங்கு மூலவருக்கு பூஜைகள் நடத்துவதில் அதே ஊரைச் சோ்ந்த முத்துக்குமாா் தரப்பினருக்கும், இவரது உறவினா்கள் பெண் வாரிசுதாரா்களான செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் நிா்வாகம் இந்தப் பிரச்னையில் தலையிட்டு இரு தரப்பினரும் 15 நாள்களுக்கு ஒரு முறை கோயிலில் பூஜைகள் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது. இந்த நிலையில், முத்துக்குமாா் தரப்பினா் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் முத்துக்குமாா் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் முத்துக்குமாா் சகோதரா் நாகராஜன் எதிா்தரப்பில் செல்வி இருவரும் காயமடைந்தனா்.

இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகாா் கொடுத்ததன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.