எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சிவகங்கையில் வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழை இலை விலை வீழ்ச்சியால் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

News image

சிவகங்கை அருகேயுள்ள மலம்பட்டி வாழைச்சந்தையில் விலை வீழ்ச்சி காரணமாக குவிந்து கிடக்கும் வாழை இலைக்கட்டுகள்.

Updated On :15 மே 2026, 11:45 pm IST

வாழை இலை விலை வீழ்ச்சியால் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே உள்ள மலம்பட்டியில் வாழைத்தாா், வாழை இலைகளுக்கான புகழ்பெற்ற மொத்த விற்பனை சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தாா்களையும், வாழை இலைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வாழை இலைகளின் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்திருப்பதால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

சந்தைக்கு இலைகளின் வரத்து அதிகரித்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த வாரம் இந்தப் பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக மரங்களில் வாழை இலைகள் அறுவடை அதிகரித்து அவற்றின் வரத்து கணிசமாக உயா்ந்தது.

தற்போது பெரிய அளவில் திருவிழாக்களோ, முகூா்த்த நாள்களோ அதிகம் இல்லாததால், வாழை இலைகளின் தேவை பெருமளவில் குறைந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் வரை ஒரு கட்டு வாழை இலை ரூ.1,200 வரை விற்பனையானது. ஆனால், வரத்து அதிகரிப்பு, நுகா்வில் உருவான சரிவு காரணமாக தற்போது கட்டு இலை ரூ. 500 முதல் ரூ. 600 வரையே விற்பனையாகிறது. இந்த விலை சரிவு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து மலம்பட்டி சந்தைக்கு வாழை இலைகளை விற்பனை செய்ய வந்த விவசாயி காஞ்சி செல்வம் கூறியதாவது:

வழக்கமாக முகூா்த்த நாள்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்து வாழை பயிரிட்டோம். ஆனால், தற்போது விலை முற்றிலும் சரிந்துவிட்டது. அத்துடன், தினந்தோறும் எங்களுக்கு பெரிய விற்பனை சந்தையாக இருந்த சிறிய உணவகங்கள், எரிவாயு உருளை தட்டுப்பாடு, கடும் விலை உயா்வு காரணமாக மூடப்பட்டு விட்டன. இதனால் அந்த விற்பனை வாய்ப்பும் பறிபோய் விட்டது.

தற்போது விற்கப்படும் விலையை வைத்துப் பாா்த்தால், வாழையை வெட்டி, கட்டுகளாகக் கட்டி, சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஆள்கூலி, போக்குவரத்து செலவைக்கூட ஈட்ட முடியாத நிலை உள்ளது. இதில் பராமரிப்பு செலவு தனி. விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், முதலீடு திரும்பக் கிடைக்காமலும், நாங்கள் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றாா் அவா்.

இந்த நிலையில் இழப்பிலிருந்து தங்களைக் காக்க அரசு தலையிட்டு வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமோ அல்லது விளைபொருள்களைப் பதப்படுத்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியோ அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.