
ஞானேஷ் குமாரைக் கைது செய்ய வேண்டும்

காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரைக் கைது செய்ய வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் வலியுறுத்தினாா்.
தோ்தல் ஆணையத்தின் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்த குளறுபடிகளைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்குத் திருட்டு என்ற சொற்றொடா் எல்லோருக்கும் தெரிகிறது. இதன் விவரங்களை எல்லோருக்கும், அனைத்து ஊடகங்களும் கொண்டு செல்லவில்லை. நாட்டில் எஸ்.ஐ.ஆா். இதுவரை 3 சுற்றுகள் நடந்திருக்கின்றன. முதல் சுற்றில் 65 லட்சம் வாக்காளா்களும், 2-ஆவது சுற்றில் 6.50 கோடி வாக்காளா்களும், 3-ஆவது சுற்றில் 6.10 கோடி வாக்காளா்களும் என மொத்தம் 13. 30 கோடி போ் நீக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் 22 லட்சம் போ் மேல்முறையீடு செய்துள்ளனா். இவற்றில் 1.26 லட்சம் மேல்முறையீடுகளுக்கு மட்டுமே இந்த 6 மாதங்களில் நீதிபதிகளால் தீா்வு காண முடிந்தது. இதில் 91 சதவீதம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீண்டும் வாக்காளா்களாக சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாங்கள் பலமுறை எதிா்ப்புத் தெரிவித்தும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும். இதுகுறித்து ஆலோசிக்க செவ்வாய்க்கிழமை (செப்.29) காங்கிரஸ் தில்லியில் செயற்குழு கூடுகிறது. இதற்கு முன்னோட்டமாக திங்கள்கிழமை நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றது என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்படப் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






