மாவட்டத்தில் தொடரும் நகை அடகுக் கடை மோசடி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 4 தனியார் நகைக் கடன் நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வந்த 68 நகை அடகுக் கடைகள் மூடப்பட்டு, மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மூடப்படும் நகை அடகுக் கடை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் தலைமறைவாக உ
Updated on
2 min read

 தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 4 தனியார் நகைக் கடன் நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வந்த 68 நகை அடகுக் கடைகள் மூடப்பட்டு, மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

 மூடப்படும் நகை அடகுக் கடை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் தலைமறைவாக உள்ளதால், இந்த நிறுவனத்தில் அடகு வைத்துள்ள பொதுமக்களின் நகைகள் குறித்த நிலவரத்தை கணக்கிடுவதில் காவல் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் கணபதி பேங்கர்ஸ் என்ற பெயரில் 15 இடங்களில் செயல்பட்டு வந்த நகை அடகுக் கடைகள், ஜீ.பி. கோல்டு லோன் என்ற பெயரில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 39 இடங்களில் செயல்பட்டு வந்த நகை அடகுக் கடைகள், வாடிக்கையாளர்களின் நகைகளை மறு அடகு வைத்திருந்ததால் திரும்பத் தரமுடியாமல் மூடப்பட்டன. 

 இந்த நகை அடகுக் கடைகளில் ரூ.95 கோடி மதிப்பிலான நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. இதில், ஜீ.பி கோல்டு லோன் நிறுவன உரிமையாளர் போடியைச் சேர்ந்த கணேஷ்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் டி.ஜி.எல்., எம்.எம்., என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நகை அடகுக் கடைகள், வாடிக்கையாளர்களின் நகைகளை திரும்பத் தரமுடியாமல்

வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இந்த நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்துள்ள பொதுமக்கள் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

 தேனியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான டி.ஜி.எல் நகை அடகுக் கடை நிறுவனத்தின் கிளைகள் பெரியகுளம், தேனி ஆகிய ஊர்களில் 2 இடங்கள், வடபுதுப்பட்டி, தாமரைக்குளம், ஆண்டிபட்டி, க.விலக்கு ஆகிய ஊர்களில் தலா ஒரு இடம் உள்பட மாவட்டத்தில் 8 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, வத்தலகுண்டு, சின்னாளபட்டி, செம்பட்டி, பழனி ஆகிய 5 இடங்களிலும் செயல்பட்டு வந்தன. 

  விசுவாசபுரத்தைச் சேர்ந்த முத்துக்காளை என்பவருக்குச் சொந்தமான எம்.எம் நகை அடகுக் கடைகள் போடி, கம்பம், பெரியகுளம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்தன.

 கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்ட ஜீ.பி கோல்டு லோன் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்பாண்டியிடம், டி.ஜி.எல் நகை அடகுக் கடை உரிமையாளர் தங்கராஜ் மேலாளராகவும், எம்.எம் நகை அடகுக் கடை உரிமையாளர் ஓட்டுநராகவும் பணியாற்றி, தனியாக தொழில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

 மூடப்பட்ட நகை அடகுக் கடைகள் குறித்து பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

  இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், இதனால், பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் மொத்த மதிப்பு, மறு அடகு வைக்கப்பட்ட நகைகள், நிறுவனத்தின் சொத்துகள் ஆகியவை குறித்து கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல் துறை திணறல்: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான நகை அடகுக் கடைகள், அடகு பெற்ற நகைகளை விதிமுறையை மீறி மறு அடகு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ஓரே நாளில் குவியும் போது நகைகளை திரும்பத் தரமுடியாமல் மூடப்படும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

 நகை அடகு கடைகளுக்கு வருவாய் துறை சார்பில் உரிமம் வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

 உரிமம் பெற்ற நகை அடகுக் கடை நிறுவனங்கள் மற்றும் உரிமயாளர்களின் விபரங்களை காவல் துறையிடம் வருவாய் துறை அதிகாரிகள் வழங்காததால், முறைகேடுகள் நடைபெறும் இடங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

 பிரச்னை ஏற்பட்ட இடங்களில் மட்டும் பொதுமக்களிடம் புகார்களைப் பெற்று, நகைகளை மீட்டுக் கொடுத்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com