அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

போடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டெடுப்பு

தேனி மாவட்டம் போடி அருகே 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் ஒன்றை போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:12 am IST

தேனி மாவட்டம் போடி அருகே 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் ஒன்றை போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
 போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் எம்.மனோகரன் வழிகாட்டுதலின் பேரில் வரலாற்றுத் துறை மாணவர்கள் பல்வேறு ஊர்களில் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், தொல்லியல் ஆய்வாளர் மு.கனகராஜ் ஆகியோர் தலைமையில் போடி தேவாரம் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாணவர்கள் ராம்குமார், செளந்தரபாண்டியன், ராஜேஸ், பிரகாஷ் ஆகியோர் போடி சிந்தலைச்சேரியை அடுத்த புலிக்குத்தி என்ற இடத்தில் ஆய்வு செய்தபோது அங்குள்ள பாழடைந்த கிணற்றில் வீரக்கல் ஒன்றை கண்டெடுத்தனர்.  சதுர தூண் வடிவிலான இக்கல்லில் நான்கு பக்கமும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறியதாவது: மூன்று அடி உயரமுடைய இக்கல்லில் 3 பக்கமும் மனிதர்களின் உருவமும், ஒரு பக்கம் பசு மற்றும் நந்தி உருவங்களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. முன் பக்கத்தில் சகோதரர்கள் இருவர் வலது கையில் வாளை கீழே ஊன்றிய நிலையிலும், இடது கையை அவரவர் இடுப்பில் வைத்த நிலையிலும் அது காணப்படுகிறது. மேலும் மேலாடையின்றி, கழுத்தில் ஆபரணங்கள், தலையில் வீரர்களுக்கான உச்சிக் கொண்டை  மற்றும் காதணிகளுடன் காணப்படும் இச்சிற்பங்கள் போர் வீரர்களாக இருக்கலாம். இதன் வலது பக்கத்தில் உடன்கட்டை ஏறுவதற்கு முயன்ற நிலையில் கையில் தீப்பந்தம் எந்திய நிலையில் பெண் ஒருவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பெண் இடுப்பில் கை வைத்து நின்ற நிலையிலும், கழுத்தணிகள், மார்புக் கச்சை அணிந்தும் காணப்படுகிறது. இப்பெண் இரு போர் வீரர்களின் மூத்த சகோதரரின் மனைவியாக இருக்கலாம் என்றும், கணவர் இறந்ததால் உடன்கட்டை ஏறுவதற்கு முயன்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 இதற்கடுத்த பக்கத்தில் கையில் வாள் பிடித்த நிலையில், மேலாடையின்றியும் கழுத்தணிகளுடனும், விரிந்த மார்புடனும் ஒரு ஆணின் சிற்பம் காணப்படுகிறது. மேலும் பெண் ஒருவர் அணி கலன்களுடனும், மார்புக் கச்சையுடனும் காணப்படுகிறார். இதில் ஆண் இப்பகுதியின் தளபதியாக இருக்கலாம். அந்த பெண்ணின் கொண்டை அமைப்பு நாயக்கர் கால படைத் தளபதிகளின் மனைவிகள் அணியும் கொண்டை போன்று காணப்படுகிறது. இச்சிற்பம் தளபதி இறந்த பின்பு அவரின் மனைவி உடன்கட்டை ஏறுவதற்கான அறிகுறியுடன் தென்படுகிறது.
 இந்த வீரக்கல்லின் நான்காவது பக்கத்தில் பசு ஒன்று சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பது போன்றும், அதன் கீழ் நந்தி ஒன்று அமர்ந்த நிலையில் கழுத்தை உயர்த்தி பார்ப்பது போன்றும் அமைந்துள்ளது. பசு, பால் சுரக்கும் சிற்பங்கள் நற்காரியங்கள் செய்தவர்கள் இறந்த பின் கடவுளை அடைவதாகக் கூறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இவ்வீரக்கலில் உள்ள படை வீரர்கள் நற்காரியத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்திருக்கலாம் என்றும், எனவே அவர்களது மனைவியர் உடன்கட்டை ஏறுவதை காட்டும் விதமாகவும் இது அமைந்துள்ளது என்றும் கருதப்படுகிறது.
 மேலும் இது சைவ சமயத்தை சேர்ந்ததாகவும், இதன் அமைப்பு 16, 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், நாயக்கர் கால கலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.