போடிமெட்டு அருகே வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் கேரளத்துக்கு சென்ற வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
கேரளத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளத்தை ஒட்டியுள்ள போடிமெட்டு மற்றும் போடி பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை போடிமெட்டு அருகே, கேரள எல்லைப் பகுதியில் சுண்டல் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு சாலையை மூடியது. இதனையடுத்து போடியிலிருந்து கேரளத்துக்கு சென்ற வாகனங்கள் போடிமெட்டில் நிறுத்தப்பட்டன.
ஏற்கனவே குமுளி சாலையில் சாலையில் சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் கம்பம் மெட்டு மற்றும் போடிமெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டன. தற்போது போடிமெட்டு அருகிலும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் போடி முந்தல் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
இதனையடுத்து மண் சரிவு மாலையில் அகற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஏற்கனவே கடந்த 7 நாள்களாக தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் வேலையிழந்துள்ளனர்.
ஹைவேவிஸ் மலைச்சாலை: ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தனியார் தேயிலை தோட்டப்பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழைக்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்துவிட்டன.
இதனையடுத்து மலைச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், நெடுஞ்சாலைதுறையினர் ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர். இதனையடுத்து வியாழக்கிழமை மீண்டும் போக்குவரத்து துவங்கியது.